mayil
Writer✍️
சிறுவயதிலே முருகனை தன் இஷ்ட தெய்வமாக மனதில் இருத்தியவள் துளசி.
“எனக்கு வரப்போற மாப்பிளையை சீக்கிரம் கண்ணுல காட்டு , என்னால தங்கச்சி கல்யாணம் டிலே ஆகக்கூடாது சொல்லிட்டேன்” என்று வேண்டியபடி அடுத்த பிரகாரத்தை நோக்கி நடந்தாள்.
“துளசி யாரோட வந்திருக்க” என்று கேட்டபடி அவளருகே வந்தார் விஷ்ணுவின் தாய் காமாட்சி.
“ஐயோ இன்னைக்கா இவங்கள பாக்கணும்” என்று எண்ணியவள்”அம்மா கூட வந்தேன் ஆன்ட்டி . எங்க ஆரு வரலையா கோயிலென்னா உடனே கிளம்புறவளாச்சே “ என்று தோழியை பற்றி பேச்சை மாற்றினாள் .
“அவ மகனுக்கு ஏதோ வாங்கணும்னு அண்ணன் கூட உங்க கடைக்கு தான் கிளம்பி போனாம்மா “ என்றதும் “என்னடா இது” என்றானது அவளுக்கு.
ஹாப்பி ஷாப்பில் விஷ்ணுவை சந்தித்து விட்டு நேரடியாக மாமனிடம் வந்து வேறு மாப்பிள்ளை பார்க்கச்சொல்லி இன்றுடன் இரண்டு நாட்கள் கடந்து விட்டது. இப்போது அவனின் தாயை கண்டதும் ஏனோ சற்று சங்கடமாக உணர்ந்தாள் துளசி . எவ்வளவு இனிமையான அம்மாவுக்கு இப்படி ஒரு ராட்சத குணம் கொண்ட மகனா என்று எண்ணிக் கொண்டாள் அவள்.அப்போது அவளின் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவள் “ ஆரு தான் ஆன்ட்டி” என்றவாறு தனியாக வந்தாள்.
“துளசி எங்க இருக்க. நான் காம்ப்ளக்ஸ்ல உன்னை தேடிக்கிட்டு இருக்கேன்”என்றாள் ஆரணி .
“ஆரு நான் அம்மா கூட கோயில்ல இருக்கேன் .இங்க தான் ஆன்ட்டியும் இருக்காங்கடி.பட் அவங்களை பாக்க ஒரு மாதிரி இருக்கு உனக்கு புரியுதா” என்றாள் அவசரமாக.
“ஹேய் இப்ப எதுக்குடி பீல் பண்ற .பெரியவங்க பேசின கல்யாணத்துக்கு நீ உன்னோட முடிவ சொல்லிட்ட.இதுக்கு மேல யோசிக்காத விடு .அதை பத்தி தான் உன் கூட நேரடியாக கேக்கலாம்ன்னு கிளம்பி வந்தேன். உனக்கு இஷ்டம் இல்லனா என்ன பண்றது விடு. பட் நீ அண்ணியா வந்தா அண்ணனை விட எனக்கு தான் ரொம்ப சந்தோஷம் துளசி. கொஞ்சம் மனம் வையேன் நீ “ என்று ஏக்கமாக சொன்னாள் ஆரணி .
“விளையாடாத ஆரு .இந்தப் பேச்சை இதோட விடு.ஏய் நீ இப்படி பேசுற ஆள் இல்லையே.யாரு உங்க நொண்ணன் சொல்லி கொடுத்து பேசுறியா….சொல்லுடி ?ஏதோ சொதப்புறன்னு எனக்கு நல்லாவே விளங்குது.சரி நான் அப்புறம் பேசுறேன் “ என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.
காமாட்சியும் தாயும் தங்களை மறந்து பேசிக் கொண்டிருப்பதை கண்ட துளசி அவர்களின் பேச்சு இந்த திருமணம் பற்றியதாக தான் இருக்கும் என்று ஊகித்துக்கொண்டாள்.
மறுபுறம் தங்கை அருகே நின்று துளசியுடன் அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தான் விஷ்ணு.
”நான் அப்பவே சொன்னன்தானே அண்ணா. அவ கண்டு பிடிச்சிடுவான்னு”என்று சலித்தபடி சொன்னாள் தமையனிடம்.தன்னுடைய இரண்டாவது முயற்சியும் தோற்றுவிட்டதை உணர்ந்து கொண்டான் விஷ்ணு. .
தாய் பிரகாரத்தை சுற்றி வர எழுந்து கொண்டதும் துளசியும் எழுந்து கொண்டாள்.
“நீங்க சுத்திட்டு வாங்க நான் துளசி கூட இருக்கேன்” என்றார் காமாட்சி.
“ஐயோடா இது என்ன மறுபடியுமா ?இப்பதான் ஆருவ சமாளிச்சு முடிச்சேன்,திரும்ப இவங்களுமா” என்றானது அவளுக்கு .
“துளசி நான் சுத்தி வளைக்காம நேராகவே கேக்கிறேன் .ஏம்மா உனக்கு விஷ்ணுவை பிடிக்கலை . அவனே சொன்னான் உன்னை சின்ன வயசிலிருந்து ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டதால இப்ப அவ தன்னை திரும்பியும் பாக்குறா இல்லைன்னு.ஆனா உனக்கு ஒரு விஷயம் சொல்லவா. இப்போ அவன் ரொம்பவே மாறி இருக்கான்.அதுக்கு காரணம் நீதான் துளசி”
“என்னது நானா? என்ன சொல்றீங்க ஆன்ட்டி? என்று வேகமாகக் கேட்டாள்.
“ஆமா…..கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இங்க வெள்ளம் வந்துச்சே.அப்போ நாங்கெல்லாம் ஊருக்குப் போயிருந்தோம்.அப்ப அவன் மட்டும் தான் வீட்டில இருந்தான். வீடு முழுக்க வெள்ளம். வேலைக்காரங்க கூட உதவிக்கு இல்லை.தனியா தான் இருந்தான். ஐஞ்சு நாளா மொட்ட மாடில தான் இருந்திருக்கான்.சாப்பாடு வேறு இல்லை.போர்ட்ல போய் பார்த்தவங்க தான் ஹெல்ப் பண்ணி ஆம்புலன்சில ஏத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தாங்க.
“உடம்பு சரியாக ரெண்டு மூணு வாரம் ஆச்சு.நான் பாத்தப்போ என்ன சொன்னான் தெரியுமா ?
”அம்மா சின்ன வயசுல துளசியை ரொம்ப கொடுமைபடுத்தி இருக்கேன் நான். அது தான் இப்படி யாரும் இல்லாத நேரமா பாத்து சாப்பாடு கூட இல்லாம எனக்கு கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார் போலன்னு கண்ணு கலங்க சொன்னாம்மா. அதுக்கப்புறம் ரொம்ப அமைதியா மாறிட்டான்.பழைய கடுகடு விஷ்ணு அதுக்கப்புறம் சாந்தமா ஆயிட்டான்.
“நாங்களும் நிறைய இடத்துல பொண்ணு பார்த்தோம். ஆனா எதுக்குமே ஓகே சொல்லல அவன். உன்னை கட்டி வைக்க சொல்லி அவங்க அப்பாகிட்ட கேட்டானாம்.ஆனா நேத்து ராத்திரி என் மடியில படுத்துட்டு நீ தன்னை வேண்டாமுன்னு சொன்னது தாங்காம ரொம்ப உடைஞ்சு போய் பேசினான். அதுதான் அவனுக்காக கோவிலுக்கு வந்தேன். கடவுளா பாத்து உன் கூட பேச வச்சிருக்கார் போல என்கிறார்.
அவளின் கைகளை பிடித்தவாறு “என் பையன கட்டிக்கிறியா ? என்று ஏக்கமாக அவள் முகத்தை பார்த்தார்.
துளசிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. திகைத்துப்போய் மலங்க விழித்தவள் “சட்டென்று ஈவினிங் சொல்லவா ஆன்ட்டி ” என்று தன் வாய் முணுமுணுத்தது கண்டு விழி பிதுக்கினாள்.
“சரிம்மா நான் ஈவினிங் கூப்பிடுறேன் .நல்ல முடிவா சொல்லு” என்றபடி கிளம்பினார் காமாட்சி.
கோயிலிலிருந்து கிளம்பி வேகமாக அறைக்குள் நுழைந்து கதவை பூட்டியவள் அழைத்தது என்னவோ காந்தனுக்கு தான்.அவர்களின் பேச்சு முடிய நீண்ட நேரமானது . துளசியால் எதையும் நம்ப முடியவில்லை.இப்படி ஒருவனால் தன் இயல்பில் இருந்து விடுபட முடியுமா?என்ற கேள்வி தான் அவளின் முன் வந்து நின்றது.
ஏனோ” துளசி குட்டி” என்று கூப்பிட்டு சிரித்தபடி தன்னை நோக்கி ஓடி வரும் விஷ்ணுவின் சின்ன வயது தோற்றம் கண்முன் வந்து போனது அப்போது .அந்த நினைவில் அவள் முகம் புன்னகை பூசிக்கொண்டது
அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.கல்லூரி காலத்தில் காதலர்கள் பலர் கை கோர்த்து அவள் கண் முன்னே திரிகையில் ஒரு கணம் விஷ்ணுவின் முகம் மனதில் தோன்றி மறையும்.காந்தன் அனுப்பும் படங்களை பார்க்கையில் கூட விஷ்ணு இப்போது எப்படி இருப்பான் என்று பல தடவைகள் அவள் நினைத்தது உண்டு.ஆனால் அடுத்த நொடி எதற்கு அந்த ராட்சசனை இப்போது நினைத்தேன் என்று தெளிந்து விடுவாள் .மொத்தத்தில் அவளையும் அறியாமல் தன் ஆழ்மனதில் அவனுக்கான தேடல் இருப்பதை இன்னும் அவள் அறிந்து கொள்ளாமல் இருப்பது தான் வேடிக்கை .
மாலை நேரம் தாயை அழைத்துக்கொண்டு துளசி வீட்டுக்கு வந்தாள் ஆரணி.அவளுக்கு தோழியின் பதிலை அறிய வேண்டி இருக்கிறது..எல்லோரும் கூடியிருந்து பேசிக்கொண்டிருக்க இருவரும் பின்பக்க வராண்டாவில் வந்து உட்கார்ந்து கொண்டனர்.
“ஆரு “ என்று அவள் கைகளை பிடித்த துளசி “கோயில்ல ஆன்ட்டி கிட்ட உளறிட்டிடேண்டி. இப்ப என்ன சொல்லுறது .டென்ஷனா இருக்குடி” என்றாள் பதட்டத்துடன்.
“அதுதானே பார்த்தேன் . நீ எப்படி ஓகே சொல்ல போறேன்னு .ஒன்னு சொல்லவா யாரோ தெரியாத ஒருத்தன கட்டிக்கிறதுக்கு என் அண்ணனை கட்டிக்க.அவன் கூட பேசி முடிவெடு சரியா.உனக்கு ஏதும் கண்டிஷன் இருந்தா இப்பவே தெளிவா அவன்கிட்ட சொல்லிடு.நீ எங்க வீட்டுக்கு வந்தாலே போதும்டி .ப்ளீஸ் துளசி.இப்ப ஓகே சொல்லேன் எனக்காக.
அவள் முகத்தில் தமையனுக்கு ஓகே சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்பட்டமாய் தெரிவதைக் கண்டு கொண்டாள் துளசி.ஏற்கனவே காந்தனுடன் பேசியதில் சற்று மனம் மாறி இருந்த துளசி தயங்கியபடியே “இது எப்படி சரியாக வரும்ஆரு”, என்றாள்
அவளின் இந்த தயக்கம் துளசியின் மனம் கொஞ்சம் மாறி இருப்பதற்கான சான்று என புரிந்து கொண்டாள் ஆரணி.
“அதெல்லாம் சரியா வரும், இப்ப நீ ஓகே சொன்னதா எல்லார்கிட்டயும் சொல்லிடவா ” என்று கேட்டவள்,துளசியின் பதிலை கேட்காது வேகமாக அங்கிருந்து போய் எல்லோரிடமும் துளசி சம்மதித்து விட்டாள் என்பதை அறிவித்தாள் .
அவளுக்கு தெரியும் இதை விட்டால் துளசியை ஒருபோதும் தமையனுடன் சேர்த்து வைக்கும் நிலைக்கு கொண்டு வர முடியாதென்று. அண்ணன் மனதில் துளசி மேல் இருக்கும் காதல் இருவரையும் நன்றாக வாழச் செய்யும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.